Wednesday, October 8, 2008

விடியலை நோக்கி

இருளென இமைகள்
மூடி
விடியலை நோக்கி
காத்திருந்தேன்
விடியல் அழைத்தது -
நடக்கலானேன். அங்கே
பதித்திருந்த கண்ணாடிகளில்
இருளின் பிரதிபலிப்பு
மற்றொரு ஒளியாய்.

Monday, September 29, 2008

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்


தலையில் பொன் சாயம்
காதில் கடுக்கன்
கறுத்து மெலிந்த உடல்வாகு
அவனைப் பார்த்த உடன்
வெறுக்க தோன்றியது...ஆனால்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

தலையை அடிக்கடி
சரிசெய்து கொண்டவனாய்
என் பக்கம் படர விட்ட அவன் பார்வை
என் பின்னால் நிற்கும் பெண்ணையும் தொட்டது.
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒரு குட்டி பெண் கரணம் அடிக்க
தொடங்கினாள். காசு போட யாரும்
முன் வராத சோகத்தோடு வெளியேறினாள்.
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

அவன் கம்பியைப் பிடித்து கத்திக் கொண்டே
கையை வெளியே நீட்டினான்
எல்லாரின் பார்வையையும் திருப்பினான்
நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன் உடலையும் வெளியே
நீட்டி அருள் வந்ததைப் போல
கத்தத் தொடங்கினான்
மற்றவர்கள் அவரவர் தினப்படி
அலுப்பில் மூழ்கி இருந்தனர்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
அவனைத் திடீரென ஒரு மின்கம்பி
முத்தமிட்டது..
எல்லாரும் உச்ச் கொட்டினார்கள்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Wednesday, September 24, 2008

என் பாட்டி வீடு பெரிய வீடு


என் பாட்டி வீடு,
அம்மாவோடு சேர்த்து
எட்டு பேரு
வளர்ந்த பெரிய வீடு!!

மாடுகள் மேய்ச்சலோடு
மாடி படியில்
சூடு லோட்டாவில் கேப்பை,
தொட்டால் வெட்கம் தாங்காமல்
சுருளும் சுவுங்கி இலை,
தரை உடைய பம்பரம்
கோலி விளையாட்டு,
முள்ளு காட்டில் கல்லடிக்க
பச்சைப் பாம்பு,
பரசுவை பழி வாங்க சூடு கொட்டை,
பல்பில் பச்சை தண்ணீர் விட்டு படம்.

என் பாட்டி வீடு
பெரிய வீடு.

நீச்சல் குளமாய் நீர் தொட்டி,
ஓடி விளையாட மாடம்,
ஒளிய மச்சில் கூடம்,
மண் மதில் தாண்டினால் பெரிய இடம்,
பேச்சியம்மா வந்து கரைப் பல்
காட்டி கதை சொல்லும் வராந்தா
இலட்சுமி அக்கா கல்யாண இரவில்
ரகசியமாய் அடைக்க பட்ட மாடி அறை
E.B. மாமா வீட்டுத் தூளீ
பாலு மாமா வீட்டு மாட்டுப் பண்ணை
வீட்டு பின்னால தென்னை மரம்,
வாசலில் வரும் நொங்கு,
என் பாட்டி வீடு
பெரிய வீடு.

..........

"இந்த வீடு
விலை போகாதுங்க
சின்ன வீடு
காரை சுவரு
பின்னாடியும் பெரிய
இடம் இல்லை பாருங்க
ஊருக்குள்ளார ஒன்னும் இல்லை
சிவன் கோவிலும் சங்கர மடமும் தான்
தண்ணி வேற பிடிச்சு வைக்கணும்
முள்ளு காடு அந்த பக்கம்
இந்த வீடு
விலை போகாதுங்க"

Sunday, September 21, 2008

என் அடையாளம்



சிதறிக் கிடந்த

பொம்மைகளில்

நாய் பொம்மை

எங்கே என்றாள் மனைவி

நாயைத் தட்டிக் தடவிப்

பொக்கையாய் சிரித்தது குழந்தை

ஜன்னலின் வெளியே

பார்த்துக் கொண்டேன்.. ஏக்கத்துடன்.

Tuesday, September 9, 2008

நம் காதல்!!


நான் உன்
நிழல் என்றேன்!!
உதடுகள் ஒட்டிய
சிரிப்பை உதிர்த்தாய்!!

சாயம் இல்லா முகமும்
சலவை செய்யாத ஆடையும்
பழகி கொள்ள சொன்னாய்,
மறக்காமல்
உன் வியர்வை நாற்றமும்!!

Tuesday, April 29, 2008

முக-உரை

நான், என் முகம் தேடும் ஒரு பயணி. என் அனுபவங்கள் என்னைத் தனிமை படுத்துமா என்று யோசித்து பார்க்கிறேன். ஆனால் நான் மட்டும் தனிமையில் இல்லை - அந்த சிந்தனையிலும்.





"நான் நான் என்றேன்
நீயா !? என்றனர் ஊர் மக்கள் "

எனக்கும் உனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை போக்குகின்ற களமா இது? என்னை எனக்கே அடையாளம் காட்ட போகும் தளமா? பயணம் தொடங்கிவிட்டது. மொழி, மதம், கலாச்சாரம் ஆகிய நான் தேடாது என்னைத் தேடியடைந்த அடையாளங்கள் தவிர, நான் வேண்டும் அடையாளங்களின் தேடலின் தொடக்கம் இது. என் சிந்தனைத் தேக்கம் இது. இந்த தேடலின் பயன்பாடு எனக்கு கிடைத்தாலும் உனக்கு கிடைத்தாலும் என் பயணம் வெற்றியே. பயணிப்போம்.

என் உணர்ச்சியின் உச்ச நிலை பல சமயம் மௌனமாகவே முடியும். அந்த வெளி மௌன சமயங்களிலும் என் மனம் கொடி பிடிக்காமல் போராட்டம் செய்யும். சமாதி நிலை அல்ல சாது நிலை இந்த போராட்டத்தின் முற்று புள்ளி என்ற தெரிவு சில புத்தகங்கள் தந்தது. மற்றபடி கிடைப்பதெல்லாம் இடைக்கால வாய்தாக்களே. மௌனம் பலமான வார்த்தை பேசும் என்ற நம்பிக்கையில் என் மனதுடன் ஒரு உடன்படிகை செய்து இந்த வலை பதிவு மாலையைத் தொடங்குகிறேன்.