Sunday, January 29, 2012

ஊனத்திற்கு ஊக்கம்?

அவளின் அழகான
கண்கள் என்
இரும்புக் கால்களை
மெதுவாய் மிக மெதுவாய்
வருடிக் கொண்டிருந்தது
அவளின் வட்ட மார்பை
நான் ரசிப்பதை
சட்டை செய்யாமல்!

Thursday, January 19, 2012

வேடிக்கை மனிதர்

வேடிக்கை மனிதர்

கறை வேட்டியைக்
கறைத் தீண்டாமலிருக்க
கால்களை எவ்வளவு
உயர்த்துகிறார்?

ஆச்சர்யமாய் இருந்தது
அவர் வண்டியின் சேறு
என் முகத்தில் பதியும் முன்வரை

வேடிக்கை மனிதர்?

அழகிய உடல்கள்

அழகிய வழுவழுப்பான உடல்கள்
எவனுக்குப் பிடிக்காது
தடுப்பது
பயமும்
கூச்சமும்
ஏதோ மறந்து விட்டேனே
ம்...
ம்...
ம்...
ஆங்....அவளின் சம்மதமும்!

வயதானவரா?

கறுத்தத் தோல்
ருசிக்கத் தூண்டியது - ஆனால்
கனிந்துயிருக்கவில்லை.
கசப்பை மட்டும் வாயிலொட்டி
செல்லாமல் ஏமாற்றத்தையும்!

Saturday, January 14, 2012

உறங்காமல்

எங்கோ ஒரு
பேருந்து சாலையின்
அதிகாலையில்
தேநீர் அருந்தி
நிலவு பார்த்து
கீழ்வான மஞ்சள் ரசித்து
உறக்கம் குறித்துக்
கனவுக் காணாமல்,
என் படுக்கையில்
நித்திரைப் பிடிக்காமல்
புரண்டுக் கொண்டிருக்கிறேன்!!

Wednesday, October 8, 2008

விடியலை நோக்கி

இருளென இமைகள்
மூடி
விடியலை நோக்கி
காத்திருந்தேன்
விடியல் அழைத்தது -
நடக்கலானேன். அங்கே
பதித்திருந்த கண்ணாடிகளில்
இருளின் பிரதிபலிப்பு
மற்றொரு ஒளியாய்.

Monday, September 29, 2008

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்


தலையில் பொன் சாயம்
காதில் கடுக்கன்
கறுத்து மெலிந்த உடல்வாகு
அவனைப் பார்த்த உடன்
வெறுக்க தோன்றியது...ஆனால்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

தலையை அடிக்கடி
சரிசெய்து கொண்டவனாய்
என் பக்கம் படர விட்ட அவன் பார்வை
என் பின்னால் நிற்கும் பெண்ணையும் தொட்டது.
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒரு குட்டி பெண் கரணம் அடிக்க
தொடங்கினாள். காசு போட யாரும்
முன் வராத சோகத்தோடு வெளியேறினாள்.
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

அவன் கம்பியைப் பிடித்து கத்திக் கொண்டே
கையை வெளியே நீட்டினான்
எல்லாரின் பார்வையையும் திருப்பினான்
நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன் உடலையும் வெளியே
நீட்டி அருள் வந்ததைப் போல
கத்தத் தொடங்கினான்
மற்றவர்கள் அவரவர் தினப்படி
அலுப்பில் மூழ்கி இருந்தனர்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
அவனைத் திடீரென ஒரு மின்கம்பி
முத்தமிட்டது..
எல்லாரும் உச்ச் கொட்டினார்கள்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.